சென்னை, ஏப்.1: வேலூர் அருகே காட்பாடியில் இன்று நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் என்பவரது வீடு மற்றும் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது.தி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சோதனை குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
சோதனை நடத்தட்டும். எவ்வளவு பணம்? அது யாரது பணம்? என்பதையும் கண்டுபிடித்து சொல்லட்டும். அது தப்பில்லை.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் ரூ.560 கோடி பிடித்தார்களே? அது என்ன ஆனது? அது யாருடைய பணம்? எங்கிருந்து வந்தது? என்ற விவரங்களை இன்னும் சொல்லவில்லையே.

அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது ஆவணங்களை தூக்கிக்கொண்டு எல்லோரது கண் முன்னாலேயும் ஒருவர் ஓடினாரே. அது என்ன ஆவணம்? கண்டு பிடிக்கப்பட்டதா? இதுவரை அதுபற்றி எதுவும் சொல்லவில்லையே.
நடந்ததை மறப்போம் என்று அதை மறைக்க சொல்கிறார்களா? உங்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற கதையா?
தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் தப்பில்லை.