விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுப்பட்டதாக 37 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 2017 நவம்பர், டிசம்பர் இரண்டாவது பருவத் தேர்விலும் 2018 பிப்ரவரி, மார்ச் அரியர் தேர்விலும் வினாத்தாள் முன்னதாக வெளியானது குறித்து பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட தற்காலிக பணியாளர்கள் தேர்வு எழுதிய மாணவர்களிடம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு கேள்வித்தாள் மற்றும் அதற்கான பதிலை எழுதுவதற்காக Answer Sheet என்கிற விடைத்தாளையும் கொடுத்துள்ளனர். 

பிறகு, அந்த தாளில் பதில் எழுத்தப்பட்டவுடன் அவற்றை விடைத்தாளின் பண்டுலுக்குள் வைத்துள்ளனர். இந்த தேர்வை சம்மந்தப்பட்ட மாணவரும் எழுதியிருக்கலாம் அல்லது வேறு யாரு வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அந்த 37 தற்காலிக பணியாளர்களையும் அண்ணா பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், சென்னை, மதுரை, சேலம் உட்பட 7 மண்டலங்களில் பணியாற்றி வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அலுவல உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், அலுவலகப் பணியாளர்கள், பேராசியர்களின் உதவியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் 23 மண்டலங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மண்டல மையங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பொறியியல் கல்லூரிகளாகவும் அல்லது அதன் உறுப்பு கல்லூரிகளாகவே இருக்கும்.