சென்னை, மார்ச் 30: ஓட்டுப்போட வராதவர்கள் அனைவரும் வந்து ஓட்டுப்போட்டால் வெற்றி நிச்சயம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் ஸ்ரீதரை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 8 மணிக்கு பல்லாவரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கி அவர் தாம்பரத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது கமல் கூறியதாவது-
நமக்கு எதுக்கு வம்பு இந்த ஓட்டை போட்டு இவங்க இனிமே திருந்தபோவது இல்லை என்றுஎண்ணி அசட்டையாக இருந்து விட்டதால்தான் இந்த நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம். ஒட்டு போடாம இருந்தவங்க எல்லாம் இறங்கி வந்து ஓட்டு போட்டீங்கன்னா நிலைமை மாறும்.
எனவே மாடமாளிகைகளில் வாழ்பவர்களும் சரி, ஏழைகளாக இருப்பவர்களும் சரி நம்பி வந்து ஓட்டுபோடுங்கள். உங்களுக்கு நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நல்ல கட்சி என்று தேடினால் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் உங்கள் கண்ணில் தென்படும்.

அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த தொகுதியில் வழக்கறிஞர் ஸ்ரீதர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெற செய்தால் உங்களுக்கு தேவையானதை கண்டிப்பாக செய்வார். இவ்வாறு கமல் பேசினார். தொடர்ந்து படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், தாமரைப்பாக்கம் கூட்டுரோடு, பூந்தமல்லி பேருந்து நிலையம், குமணன்சாவடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
மைக்கில் பேச தடை
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்த போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி மைக்கில் பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு தடை விதித்தனர். அதனைத் தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மைக்கில் பேசலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.