சென்னை, மார்ச் 29 : டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சி வேட்பா ளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி துவங்க இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தேர்தல் கேட்ட நிலையில், குக்கர்
சின்னத்தை ஒதுக்கதேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து சின்னம் ஒதுக்குவது தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாட, அமமுக தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தினகரன் தரப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் பொது
சின்னமாக பரிசுப்பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பொதுசின்னம் பெற்ற நிலையில், அமமுக வேட்பாளர் வெற்றிவேல் கூறுகையில், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னம் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். சுயேச்சை வேட்பாளர்களான இவர்கள் தொகுதிக்கு 50 வாக்குகள் பெறுவதே பெரிய விஷயம். நிச்சயம் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறப்போகிறார் என்றார்.