புதுடெல்லி, மார்ச் 28:தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இப்போதைக்கு தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கில், கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
3 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டதையடுத்து 3 தொகுதிக ளுக்கும் தேர்தல் நடத்த தயார் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி
சத்யபிரத சாகு தெரிவித்து இருந்தார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்திரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஏப்ரல் 18-ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி நாங்கள் தான் முடிவு செய்வோம். உரிய காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது.