நிதி ஆயோக் துணை தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

இந்தியா

புதுடெல்லி, மார்ச் 27:காங்கிரஸ் தெரிவித்துள்ள குறைந்த பட்ச வருமான உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கருத்து தெரிவித்த நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி அண்மையில் அறிவித்தார்.
இந்த திட்டம் சாத்தியமற்றது என்று ராஜீவ் குமார் கூறியிருந்தார். நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், இதை ஒரு போதும் நிறைவேற்ற முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நிதி ஆயோக் துணைத்தலைவரின் கருத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியது எனக்கூறியுள்ள தேர்தல் கமிஷன், இது குறித்து 2 நாளில் பதில் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.