வெற்றிபெற்று பெரும்பான்மையை நிருபிப்போம்: அமித் ஷா

இந்தியா

சிஎன்என் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித் ஷா, “மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இந்த முறை 35 முதல் 40 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்” என்று கூறினார்.

‘மேற்கு வங்கத்தில் எவ்வளவு தொகுதிகள் பாஜக வெற்றி பெறும்’ என்று கேட்டபோது “42 மக்களவைத் தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் 23 தொகுதிகளை வெற்றி பெறுவோம்” என்று கூறினார். 2014 மக்களவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

வட கிழக்கு மாநிலங்களில் இந்த முறை 20 முதல் 21 தொகுதிகள்வரை கைப்பற்றும். இந்த மாநிலங்களில் குடியுரிமை திருத்தம் மசோதா ஏதேனும் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்று கேட்டபோது, “வட கிழக்கு ஜனநாயகக் கூட்டணிமூலம் நாங்கள் இந்தப் பிராந்தியங்களில் செய்துள்ள நற்பணிகள் எங்களுக்குத் தேவையான வெற்றி அதிகரிக்கும்” என்றார்.

2014-ம் ஆண்டு தேர்தலின்போது வட கிழக்கு மாநிலங்களில் பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.

ஒடிசாவில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டு வருவது மட்டுமில்லாமல் அடுத்து அங்கு எங்களது ஆட்சியாகத் தான் இருக்கும். ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெறுகிறது.

பாஜகவில் 2-வது முக்கிய நபர் என்றால் யார் என்று கேட்டபோது ‘பாஜவில் ஒரே எண் தான் உள்ளது, அது பிரதமர் நரேந்திர மோடி தான். உலகின் மிகப் பெரிய கட்சியை வழிநடத்துவதில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுள்ளதைப் பற்றிய கேள்விக்கும், “அவர் முதல் முறையாக ஒன்று தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை. 12 வருடங்கள் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது அவருக்கு 13-வது முறை. அவரால் என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம்” என்று அமித் ஷா கூறினார்.

மிஷன் சக்தி அறிவிப்பு, தேர்தல் விதிமுறை மீறல் என்று விமர்சிக்கப்படுகின்றதே என்ற கேள்விக்கு, “இதுபோன்ற அறிவிப்புகள் இந்திரா காந்தி காலத்திலிருந்து நடைபெற்றுள்ளன. தேர்தல் ஆணையம் மோடியின் அறிவிப்பில் எந்தத் தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இது ஒன்றும் செய்தியாளர்கள் சந்திப்பு அல்ல. தேசத்திற்குப் பிரதமர் பேசாமல், எதிர்க்கட்சியின் தலைவரா பேச வேண்டும்? என்று ஷா கோபமாகக் கேட்டார்.

மிஷன் சக்தி அறிவிப்பு தேர்தலுக்கான அறிவிப்பு என்று கூறுவது அபத்தமானது. இது சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இது எல்லாம் 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டது என்றார்.

மோடி அரசு அளித்த வாக்குறுதியின் படி கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா என்று கேட்டதற்கு “வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்றால் சாலைகளை யார் போட்டது, கழிவறையை யார் கட்டி தந்தது? கிராமத்து ஒரு பெண் அழகு நிலையம் தொடங்கியுள்ளார் என்றால் அது வேலை வாய்ப்பில்லையா? என்று அமித் ஷா கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஏழைகளுக்குக்காண உதவி திட்டம்பற்றிக் கேட்டபோது, 10 வருடக் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் வறுமையிலிருந்தபோது இதை அவர்கள் செய்திருக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் அறிவித்தது போன்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்யும் எண்ணம் ஏதேனும் பாஜகவுக்கு உள்ளதா என்று கேட்டதற்கு, “நாங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஏதுமில்லை. இந்திய ஏழை குடிமக்களுக்கு ஏற்கனவே ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துவிடோம்” என்று அமித் ஷா கூறினார்.

குஜராத்தின் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமித் ஷா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.