இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு

உலகம்

நியூயார்க்,ஏப்.2: அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக இருந்தது.
அந்த வகையில் இப்போது ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கிஷோர் தட்டப்புறம், குமார் அஸ்வபதி மற்றும் சந்தோஷ் கிரி ஆகியோர் நானோசிமாண்டிக்ஸ் எனும் கன்சல்டன்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் வேலை இருப்பதாக கூறி பலரிடம் பணிக்கான அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு போலி எச் 1 பி விசாவினை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். பணிக்கு ஆட்கள் எடுப்பதாக கூறப்பட்ட பெரிய நிறுவனங்களில் அப்படி எந்த பணியும் இல்லை எனவும், அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை கண்டறிந்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.