நீட் தேர்வு ரத்து: காங். தேர்தல் அறிக்கை

இந்தியா

புதுடெல்லி, ஏப்.2:  2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 2022-க்குள் காலியாக உள்ள 22 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் என கூறியுள்ள தேர்தல் அறிக்கை, நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் அது ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை மூடப்பட்ட அறையில் இருந்து தயாரிக்கப்பட்டது அல்ல. மக்களின் கருத்துக்களை கேட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது விவசாயிகள், தொழிலாளர்கள், மக்களின் பல தரப்பினர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டதாக உருவெடுத்துள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி ஓராண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது.
தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமாக 5 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
வறுமை ஒழிப்பு நடவடிக்கையாக ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாட்களுக்கு பதிலாக 150 நாட்களாக அதிகரிக்கப்படும். கிராமங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உறுதி அளிக்கப்படும். விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் வெளியிடப்படும். நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அது ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் காலியாக உள்ள 22 லட்சம் இடங்கள் நிரப்பப்படும். தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.