உக்ரைனில் குழந்தை வன்முறைக்கு எதிராக இவ்வளவு பாதுகாப்பா?

உலகம்

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் இதர வன்முறை சம்பவங்கள் படுமோசமாக நடந்துகொண்டு இருக்கும் இந்த வேளையில், மகளை ஷாப்பிங் மால் மாடி படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டதற்காக உக்ரைன் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் நிரூபணமானால் இவருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

ஆர்டெம் (46) என்பருக்கு அன்ஷெலிக்கா என்ற 6 வயது மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் ஷாப்பிங் மால் சென்றுள்ளனர்.  அக்கா, தம்பி இருவருக்குள்ளும் ஷாப்பிங் மாலில் கொடுக்கப்படும் சக்கரம் பொருத்தப்பட்ட கூடையை தள்ளுவதில் சண்டை ஏற்பட்டது. நான் தான் தள்ளுவேன் என இருவரும் அடம் பிடிக்க, ஆர்டெம் குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றார்.
இதற்கு செவி சாய்க்காத குழந்தைகளைக் கண்டு கடுங்கோபமுற்ற அவர் மகள் அன்ஷாலிக்காவை மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார். சிறுமி உருண்டு கீழே விழுந்தார். மகளை நோக்கி காட்டமாக ஆர்டெம் நடந்து கீழே வந்தார். இக்காட்சி ஷாப்பிங் மாலின் சிசிடிவி காமிராவில் பதிவாகியது. இதனை ஷாப்பிங் மால் ஊழியர் ஒருவர் பேஸ்புக் தளத்தில் பதிவேற்ற, உடனே அந்த வீடியோ வைரலாகியது. இதனால் பலர் ஆர்டெமுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் ஆர்டெம் மீது குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தான் குழந்தைகளை சமாதானப் படுத்தவே இவ்வாறு செய்ததாக ஆர்டெம் கூறுகிறார். ஆனால் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆர்டெமுக்கு ஓராண்டு கால சிறை கிடைக்க வாய்ப்புள்ளது. இச்சம்பவத்தையடுத்து குழந்தைகளை இவர் நன்கு கவனித்துக்கொள்கிறாரா என கண்காணிக்க போலீஸார் ஆர்டெமின் வீட்டை நோட்டமிடுகின்றனர்.