வேலூர், ஏப்.1: வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலும், சிமெண்ட் குடோனிலும் நடந்த வருமான வரி சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்து திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரது சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகாரையடுத்து, வருமான வரித்துறை இன்று வேலூரில் உள்ள அவரது கல்லூரியிலும், திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டது.

வேலூர் கல்லூரியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மூட்டை மூட்டையாக பணத்தை கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேலூரில் கல்புதூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடி
சோதனையில் ஈடுப்பட்டதில் இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும் திமுகவின் அந்த பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடு பட்டனர்.

வேலூரில் தொடர்ந்து திமுகவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.2 நாட்களுக்கு முன் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த நிலையில் அவரது நண்பரின் வீட்டில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை கண்டறிய பணம் எண்ணும் மெஷின்களை வைத்து பணம் எண்ணப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம் சுமார் 10 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூட்டையில் இருந்தது பெரும்பாலும் 200 ரூபாய் புத்தம் புது கட்டுக்களாக காணப்பட்டது. ஒவ்வொரு பண்டலிலும் வார்டு வாரியாக எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த பணம் எந்த வங்கியிலிருந்து யார் மூலம் எடுத்து வரப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
வருமான வரித்துறை சோதனையை எதிர்த்து, வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் , வழக்கறிஞர் ரிச்சர்ட் ஆஜராகி, வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டிலும், அவரது கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த செயல், தனது தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் நோக்கத்தில், ஆளும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதனால், கட்சியினர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறோம். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுன் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதி அனிதா சுமந்த், மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில், நாளை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.