சென்னை,ஏப்.7: தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், தலைவர்கள் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் வர இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் வெயி லையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 18-ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 16 ம் தேதி மதியம் 6 மணியுடன் தமிழகம், புதுவையில் பிரச்சாரம் நிறைவு பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரசார நிறைவுக்கு இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக மற்றும் தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று திமுக மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, முத்தரன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக, அதிமுக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளநிலையில், அம்மா மக்கள் முன்னேற்றகழகம், எஸ்டிபிஐ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கமல், சீமான் ஆகியோரும் தனியாக தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இப்படி தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் களம் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரத்திற்கு முகாமிட உள்ளனர்.
அந்த வகையில் தங்கள் மற்றும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 9-ந் தேதி கோவையிலும், 13-ந் தேதி ஆண்டிப்பட்டியிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர், ராமநாதபுரத்திலும் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுவார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12-ந் தேதி தேனி மற்றும் மதுரையில் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அங்கு பிஜேபி வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தேனி மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து ஏப்.13ம் தேதி பிரதமர் மோடி பேசுகிறார்.
தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்த நாள்களில் வருகை தர உள்ளதால் கூட்டணியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மோடி, ராகுல் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.