ஸ்ரீஹரிகோட்டா, ஏப்.1: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.


எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுண்டவுன் நேற்று காலையில் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.


காலை 9.27 மணிக்கு விண்ணில் பாய்ந்த ராக்கெட், சரியாக 9:45 மணியளவில் எமி சாட் செயற்கைக்கோளை அதன் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதனைத் தொடர்ந்து, 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் குறிப்பிட்ட நேரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டன. 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்கள், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைகோள் உள்ளிட்டவை அடங்கும்.

ஒரே ராக்கெட்டிலிருந்து செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி வட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 436 கிலோ எடைக் கொண்ட எமிசாட் செயற்கைக்கோள், இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும்.