சென்னை, ஜன.1: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. 2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டசபை தொடங்க உள்ளது.

2019-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 2-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த உரையை நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் தயாரித்துள்ளார். இந்த உரையில் தமிழக அரசின் கொள்கை முடிவின்படி பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்னை மரங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூட்டுறவுக் கடன்கள் மற்றும் மின்சார கட்டணங்களை டெல்டா மாவட்டங்களில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து கவர்னர் உரையில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

மேலும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய திட்டங்களும் சலுகைகளும் இந்த கூட்டத் தொடரில் இடம் பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2-ம் தேதி சட்டசபை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கும், கஜா புயலால் உயிரிழந்த 62 பேரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் அதைத் தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சட்டசபையின் கடைசி நாளில் ராமசாமி படையாட்சியரின் படதிறப்பு விழா நடைபெறும் எனவும் தெரிகிறது.

நாளை கவர்னர் உரை முடிந்தவுடன் அலுவல் ஆய்வு கூடி அவை எத்தனை நாட்கள் நடத்தவது என முடிவு எடுக்கும், அதன்படி வரும் 7-ம் தேதி முதல் நான்கு நாட்கள், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெறக் கூடும் என்றும், நான்காவது நாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவறையும் என்று கூறப்படுகிறது.

நாளை சட்டசபை கூடவுள்ள நிலையில் நாளை மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், கஜா புயல் பாதிப்பு, மேகதாது அணை விவகாரம், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

விலையில்லா செல்போன், அரசு பள்ளிகள், அங்கான்வாடி மையங்களில் காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிக்கவுள்ளார். அதே போன்று வரும் 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.