சென்னை, ஜன.2:பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூரை உள்ளடக்கிய அம்மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் இது செயல்படுத்தப்படும்.

சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கஜா புயலால் ஏற்பட்ட தாக்கத்தையும், வடமாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சியின், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவாரூர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1000 வழங்கப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் மேம்பாட்டு திட்டம் ஒன்றை அரசு வடிவமைத்துள்ளது.
சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியை இந்த அரசு நாடி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதோடு, அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை ரூ. 1264 கோடியில் அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பாதுகாப்பு தளவாடங்களையும், வானூர்தி சாதனங்களையும் தயாரிப்பதை ஊக்கப்படுத்த பாதுகாப்பு தொழில் கொள்கையை இந்த அரசு விரைவில் வெளியிட உள்ளது.
புதிய தொழில்முனைவோர் தொழில் தொடங்குவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் புதிய கொள்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.