புதுடெல்லி, ஜன.2:பிஜேபி கூட்டணிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யார் வந்தாலும் அரவணைத்து செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:

எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பிஜேபி மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன்.

மக்களவை தேர்தலில் பிஜேபிக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்காக அறிவியல்ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டதா? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட பா.ஜனதாவுக்கு 180 தொகுதிக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று இதே நபர்கள் கூறினார்கள். அதே அணுகுமுறை தொடருகிறது. மக்களை கவருவதற்காக இப்படி சொல்கிறார்கள். மக்களின் அறிவுக்கூர்மை மீது நம்பிக்கை வைப்போம் என்பதுதான் எல்லா அரசியல் கணிப்பாளர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் விஷயம்.

ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அதிலும் காங்கிரஸ் தோற்று விட்டது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதுபற்றி ஓராண்டுக்கு முன்பிருந்தே எச்சரித்து வந்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை அரசிடம் கொடுத்து, அபராதம் செலுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

ஆனால், மோடியும் மற்றவர்களை போல்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மிகச்சிலர் மட்டுமே கருப்பு பணத்தை ஒப்படைத்தனர். பணமதிப்பு
நீக்க நடவடிக்கையால்தான், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இன்றோ, நாளையோ இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள், ஒவ்வொரு ரூபாய்க்கும் இழப்பீடு அளித்தே தீர வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே, முத்தலாக் தடைக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. ஆண்-பெண் சமத்துவம், சமூக நீதி சம்பந்தப்பட்டது.

சபரிமலை பிரச்சினை என்பது பாரம்பரியம் தொடர்பானது. ஆண்கள் செல்லக்கூடாத கோவில்கள் கூட உள்ளன. அங்கு ஆண்கள் செல்வது இல்லை.சபரிமலை பற்றி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம்பெற்ற ஒரு பெண் நீதிபதி, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அவரது தீர்ப்பை கவனமாக படிக்க வேண்டும். அதுபற்றியும் விவாதம் நடத்த வேண்டும். இப்பிரச்சினையை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.