இந்த பூமி நமக்கு அளவில்லாத செல்வங்களை வாரி வாரி வழங்கி உள்ளது. பூமியின் வழியாக இயற்கையும் மனிதனுக்கு அளித்த நன்மைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், மனிதன் நன்றி மறந்தவனாகி பூமியையும், இயற்கையையும் அழிக்கும் வகையில் மாறிய காரணத்தினால் இயற்கையும் மாறிவிட்டது.

இயற்கை பேரிடர்கள் அவ்வப்போது நிகழ்ந்து, பேரழிவை ஏற்படுத்தி செல்கின்றன. உரிய காலத்தில் பெய்ய வேண்டிய மழை எப்போது பெய்து பெரு வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. புயலும் ஆழிப்பேரலையும் மனித குலத்திற்கு மரணத்தை பரிசாக அளித்து வருகின்றன. இப்படிப்பட்ட பேரழிவுகள் ஏற்பட்ட போதிலும், மனிதன் அதிலிருந்து ஒருபோதும் பாடம் படிப்பதில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

அறிவியல் எத்தனையோ கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து உள்ளது. இவற்றின் மூலம் மனித குலம் பயனடைந்துள்ளது, பலனடைந்து வருகிறது. ஆனால், அறிவியல் கண்டுபிடிப்புகளால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பது பட்டால்தான் தெரிகிறது. அத்தகைய ஒரு கண்டுபிடிப்புதான் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி. பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் மண்ணில் மக்காமல் இருக்கக்கூடியவை இது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நமது முன்னோர் பயன்படுத்திய பித்தளை, தாமிரப் பாத்திரங்கள் பரணுக்கு போய் முடங்கிவிட்டன. சாதாரண பக்கெட் முதல் குவளை வரை, பாட்டில் முதல் தூக்குப்பை வரை அத்தனையும் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. புழங்குவதற்கு எளிதாக இருப்பதால் இதன் தீமை நமக்கு தெரிவதில்லை. ஆனால், இன்றைய உலகில் பிளாஸ்டிக்கால் ஏற்பட்ட பேரழிவை உணர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர்.

பிளாஸ்டிக் பொருட்களின் தீமையை உணர்ந்த பல நாடுகள் ஏற்கனவே அவற்றிற்கு தடை விதித்து விட்டன. நாம் தாமதமாக இந்த முடிவை எடுத்திருந்தாலும் ஒரு வகையில் நன்மைதான். ஆனால், மீண்டும் பயன்படுத்தப்பட முடியாத 14 பொருட்களுக்கே தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்றவை புழக்கத்திலேயே தொடரும்.

பிளாஸ்டிக் எனும் கொடிய அரக்கனிடமிருந்து நமது அன்னை பூமியை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்போம் என்று நாம் சூளுரை மேற்கொள்ள வேண்டும். அது வெறும் சூளுரையாக மட்டுமல்லாமல், இந்த புத்தாண்டு முதல் அதை செயல்படுத்த அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.