புனே, ஜன.2:  பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பி.வி.சிந்து ஐதராபாத் ஹன்டர்ஸ் அணியின் பி.வி.சிந்து, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் சாய்னா நேவாலை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.  4-வது பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடர் கடந்த டிசம்பர் 22-ம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதன் இறுதிப்போட்டி ஜனவரி 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில், இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து தலைமையிலான ஐதராபாத் ஹன்டர்ஸ் மற்றும் மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் தலைமையிலான நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலாவதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் ஹன்டர்ஸ் அணி தோற்றது.

தொடர்ந்து அந்த அணியின் லீ ஹியுன் இல், வாரியர்ஸ் அணியின் தனோங்சக்கை வீழ்த்தினார். ட்ரம்ப் போட்டி என்பதால், இதில் ஹன்டர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து, நடந்த போட்டியில் இந்திய முன்னணி வீரர்கள் பி.வி சிந்து – சாய்னா நேவால் மோதினர். கடந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த சிந்து, புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க போராடினார். அதேசமயம், காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாத சாய்னா நேவால், மீண்டும் ஃபார்மை பிடிக்க தீவிரம் காட்டினார். முதல் செட்டை சாய்னா நேவால் கைப்பற்றிய நிலையில், முழு உடல் தகுதி பெறாத சாய்னாவால் அடுத்து நடந்த 2 செட்களையும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதனால், பி.வி.சிந்து 11-15, 15-9, 15-5 என வெற்றி பெற்றார். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகளிலேயும் ஹன்டர்ஸ் அணி வெற்றி பெற்றதால் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வாரியர்ஸை வீழ்த்தியது.