ஐஐடி ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை

சென்னை, ஜன.2: சென்னையில் ஐஐடி ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி (வயது 25). இவர் சென்னை ஐஐடி-யில் உலோகவியல் துறையில் 2-ம் ஆண்டு ஆராய்ச்சி மாணவியாக படித்துவந்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையிலிருந்தே ரஞ்சனாவின் அறைக்கதவு திறக்கப்படாதிருந்துள்ளது. மாலை வரையிலேயும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த சக மாணவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் விஜயலஷ்மி தலைமையிலான போலீசார், கதவை உடைத்து திறந்துபார்த்தபோது, ரஞ்சனா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

சடலத்தை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ரஞ்சனாவின் தந்தை பினோட் குமார் பிரசாத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்பேரில், ரஞ்சனாவின் உறவினர்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்த பிறகே, தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது.