சென்னை, ஜன.2:அசோக் நகர் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றியவர் தனது மனைவியுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்சுமேன் காதில் ரத்த சொட்டிய நிலையில் இருந்ததால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனரா அல்லது யாராவது அவர்களை கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை அசோக் நகர் 4வது அவென்யூ 48வது தெரு சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தண்ணீர் டேங்க் அருகே ஒரு அறை அமைத்துள்ளனர். இந்த பூங்காவை பராமரிப்பதற்காக நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவலாங்காடு பகுதியைச்சேர்ந்த இருதயசாமி (வயது 61) அவரது மனைவி புஷ்பமேரி (வயது 58 ) ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டாக தங்கி பராமரித்து வருகின்றனர்.

இந்த பூங்காவில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று இன்று காலை 5.30 மணியளவில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடு பட்டனர். அப்போது காவலிலில் சுற்றி வரும் காவலாளி அங்கு விழுந்து கிடந்துள்ளார். இதைபார்த்த பொதுமக்கள் அவரை எழுப்பியபோது அவரது காதில் ரத்தம் சொட்டிய நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அறையில் உள்ள அவரது மனைவியை அழைத்த போது அவரும் இறந்து கிடந்தார்.

இதைபார்த்த நடைபயிற்சியாளர்கள் உடனடியாக அசோக் நகர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர்.அந்த புகார் தொடர்பாக அசோக் நகர் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் சூரிய லிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு ஓமந்தூரர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குத்தாலத்தில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களை பிச்சைக்காரர்கள் என்று நினைத்து விடாதே. ரூ. 2500 பணம் போட்டுள்ளேன். அதை எடுத்து கொண்டு எங்களின் இறுதி சடங்கை செய்து விடு என்று எழுதியிருந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் இருவரும் சொந்த ஊரான குத்தாலத்திற்கு கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கு மகனுக்கும் பெற்றோருக்கும் தகராறு நடந்ததாக என்றும் குத்தாலத்தில் இருந்து மகன் வந்த பிறகு தான் நடந்த செய்தி தெரியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.