திருவனந்தபுரம், ஜன.3:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

போலீஸ் பாதுகாப்புக்கிடையே பிந்து, கனகதுர்கா ஆகிய 40 வயது பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது. போலீசார் உதவியுடன் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்ற தகவல் வெளியான உடன் கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா, கொல்லம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் நேற்று போராட்டம் வெடித்தது.

கேரள மாநில அரசை கண்டித்து போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். கேரள சட்டசபையை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே, பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சபரிமலை பக்தர்கள் சங்கம் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனை ஏற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கேரள மாநில எல்லையில் உள்ள களியக்காவிளை போன்ற இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
குமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பெண்களை கோயிலுக்குள் அனு மதிக்கக்கூடாது என வலியுறுத்தி பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப் பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

பினராயி பேட்டி

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்று கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே இரண்டு பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டதாகவும், அவர்கள் கோவிலுக்குச் சென்றபோது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று கூறினார்.

அந்த தகவல் வெளியான உடன் தான் போராட்டம் நடைபெற்றது. கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண்க ளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார் அவர்.