சென்னை, ஜன.3: ரஜினியின் பேட்ட படம் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியீடு என்று மட்டும் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் தேதி அறிவிக்கப்படாமலேயே ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் ஜன.10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த தேதியில் ரிலீஸ் என்பதை விஸ்வாசம் குழு கூறவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழந்துள்ளனர்.2 பெரிய படங்களும் ஒரே நாளில் வெளிவந்தால் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால்
விஸ்வாசம் படத்தை 10-ம் தேதிக்கு பதிலாக 14-ம் தேதிக்கு வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு யோசிக்கிறது.

அப்படி செய்தால் முதல் 4 நாட்கள் ரஜினி படத்தின் ஓப்பனிங் பாதிக்காமல் இருக்கும். 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விடுமுறை என்பதால் அடுத்த 4 நாட்கள் அஜித் படத்திற்கான ஓப்பனிங் கிடைத்துவிடும். இதனால் 2 தரப்பிற்கும் வருவாய் கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். மேலும் பேட்ட படத்தை தயாரித்துள்ள சன்பிச்சர்ஸ்.

அதேபோல் விஸ்வாசம் படத்தின் டிவி உரிமையை வாங்கி உள்ளதும் சன்டிவி நிர்வாகம் தான். எனவே இரண்டு படங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலேயே ப்ரீ புக்கிங் தொடங்கி விட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் முன்பதிவு தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.