சென்னை, ஜன.3: பிறந்த நாட்டுக்காகவும், தான் சார்ந்த கட்சிக்காகவும் அயராது உழைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார்.

சட்டசபையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:-

94 ஆண்டுகள் வாழ்ந்து, தான் பிறந்த நாட்டுக்காகவும், தான் சார்ந்த கட்சிக்காகவும் அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை.மன உறுதியும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய தலைவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர், பத்திரிகையாளர் ஆகிய பன்முகம் கொண்ட ஆற்றலாளர். திரைப்படத் துறையில் கோலோச்சியவர். பேச்சாற்றல் மூலம் தனது கட்சித் தொண்டர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வல்லமை பெற்றவர், அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களும், அவருடைய அழகுத் தமிழக்கு ஆட்பட்டவர்களாக விளங்கினார்.

1947-ம் ஆண்டில், மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த, ராஜகுமாரி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதத் தொடங்கி, பராசக்தி, மனோகரா என அவரது திரைப்பணி தொடர்ந்தது, பின்னர் பாசக் கிளிகள், உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியாக, தொலைக்காட்சியில் ஸ்ரீராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற சிறப்பான தொடரை எழுதினார்.

75-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் படைத்தவர். துடக்குமேடை நாடகத்திற்காக நடிகவேள் திரு.எம்.ஆர்.ராதா அவர்களால் கலைஞர் என்று பட்டம் பெற்றவர்.

15 சிறு கதைகளையும், 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்தவர். தனது கட்சியினருக்கு உடன் பிறப்பே என்றும் தலைப்பில் 7000-க்கும் மேற்பட்ட மடல்கள் தீட்டியவர். கேள்வி எழுப்பி அதற்குப் பதிலும் எழுதி, தனது கருத்துக்களை உரக்க உரைக்க, அந்த கேள்வி பதில் பகுதியை கருவியாக்கிக் கொண்டவர்.

கருணாநிதி சிறப்பான குணநலன்கள் குறித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்து பாராட்டலாம். அவரது ஓயாத உழைப்பையும், அந்த உழைப்பின் பயனாய் அவர் பெற்ற உயர்வையும் எண்ணி வியக்கிறோம்.