சிட்னி, ஜன. 4:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி டிக்ளர் செய்தது.

ரிஷப் பண்ட் 150 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் சாதனைபடைத்துள்ளார். ஜடேஜா அரைசதம் அடித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்டநேரமுடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை இந்திய அணி குவித்திருந்த நிலையில், இன்றைய 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது.

130 ரன்களுடன் புஜாராவும், 39 ரன்களுடன் விஹாரியும் இந்தியாவின் பேட்டிங்கை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தது.

பின்னர், உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா இன்று தனது 4-வது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 193 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு சற்று வருத்தமளித்தாலும், 2 நாட்களாக சுமார் 9 மணிநேரம் களத்தில் இருந்து அணியின் இமாலய ஸ்கோருக்கு உதவிய புஜாராவிற்கு பாராட்டு குவிகின்றது.

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஜடேஜா சிறப்பாக ஆடி பாட்னர்ஷிப் அளித்தார். இதனையடுத்து, ஜடேஜா 81 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 189 பந்துகளில் 159 ரன்களை குவித்து சாதனை சதம் கடந்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்திருந்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது.

இந்திய அணியின் முக்கியமான 4 விக்கெட்டுகளை லையான் கைப்பற்றினார். ஹசல்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் எடுத்தார். தொடர்ந்து, இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி, இன்றைய ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகள் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. ஹாரிஸ்(19), கவாஜா(5) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ரிஷப் பண்ட் சாதனை சதம்:

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இன்றைய போட்டியில் 159 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். மேலும், நடப்பு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் கேப்டன் கோலியின்(284) ரன்களைக் கடந்துள்ளார் ரிஷப் பண்ட் என்பது கூடுதல் தகவல்.

முன்னதாக, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட்டிலும் சதம் அடித்து, இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பண்ட் பெற்றிருந்தது, குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 1967-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் எஞ்சினியர் 89 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது, கவனிக்கத்தக்கது.