திருவாரூர்,ஜன.4:இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பது பற்றி இன்று ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி முடிவு செய்யும் என்றும் இதற்கான கூட்டம் இன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக இன்று நடைபெறவிருந்த அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற இருந்த கூட்டம் நாளைக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.