சென்னை, ஜன.5:  சூப்பர் ஸ்டார் என்றாலே அவரின் ஸ்டைல்தான் நினைவுக்கு வரும். சூப்பர் ஸ்டாரையும், ஸ்டைலையும் பிரித்து பார்க்க முடியாது. அதிலும் கடந்த கால படங்களில் இல்லாத அளவிற்கு பேட்ட படத்தில் ரஜினியை கொள்ளை அழகாக காட்டியுள்ளார் ஆடை வடிவமைப்பாளர் ரிகாரிகா பாசின்கான்.
ரஜினியை இளமையாக எப்படி காட்டினேன் என்பது பற்றியும், அவருடன் பணியாற்றியது பற்றியும் ரித்விகா மாலைச்சுடருக்கு அளித்த பிர்த்யேக பேட்டி வருமாறு:-

கேள்வி:- படத்தின் உடையை பார்த்த உடன் ரஜினி சொன்னது என்ன?
பதில்:- நான் வடிவமைத்த உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தனது கண்களை பெரிதாக்கி பார்த்தார். பின்னர் என்னை பார்த்து சூப்பர்! கிளாஷ் என பாராட்டினார்.

கே:- உடைக்கும், படத்தின் கதைக்கும் சம்மந்தம் உண்டா?
ப:- பேட்ட படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் விளக்கி கூறினார். படத்தின் பெரும்பகுதி வட இந்தியாவில் நடைபெறுகிறது. அவருடைய இளமையான காலம் தென்னிந்தியாவிலும், வயதான பிறகு வட இந்தியாவிலும் கதை நகருகிறது. அதனால் இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு அந்தந்த மாநிலத்தவரின் பாரம்பரிய உடைகளை சூப்பர் ஸ்டாருக்கு ஏற்றவாறு வடிவமைத்து கொடுத்தேன்.
அதிலும் கோடைக்காலம், குளிர்காலம் என மாறும் போது அதற்கேற்ற உடைகளையும் வடிவமைத்துள்ளேன்.

கே:- 90-களில் பார்த்த ரஜினியைப்போல் இதில் தெரிகிறாரே எப்படி?
ப:- இந்த படத்தின் கதையை 90-களில் நடப்பது போலத்தான். எனவே ரஜினி 90-களில் நடித்த பிரபலமான படங்களில் அவர் பயன்படுத்திய ஆடைகளை பார்த்து பிர்த்யேகமாக தேர்வு செய்து வடிவமைத்தேன். ஒரு சில படங்களை ரஜினியே என்னிடம் பார்க்க சொல்லி அதில் உள்ளது போல் வேஷ்டி, சட்டையை வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

கே:- ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி உள்ளது?
ப:- எந்த ஒரு பெரிய நடிகரும் அவரைப்போல் பழக முடியாது. அத்தனை எளிமையான மனிதர். தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து
சகஜமாக பழகினார். அவர் படங்களை முன்பு நான் பார்த்ததில்லை. இதை அவரிடமே கூறினேன். இருந்தாலும் பரவாயில்லை. இனி மேல் பாருங்கள் என்று பண்பாக சொன்னார்.
நான் எத்தனை முறை ஆடைகளை மாற்றச்சொன்னாலும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ஒரு குழந்தையைப்போல் ஆடையை மாற்றிக்கொண்டு வந்து எப்படி இருக்கேன் என்று அவருக்கே உரிய பாணியில் கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார்.

கே:- சிம்ரன், ரஜினியின் கேரக்டர் என்ன?
ப:- ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார். சிம்ரன் யோகா டீச்சராக வருகிறார். எனவே யோகா டீச்சருக்கு தேவையான வகையில் அவருடைய உடைகளை வடிவமைத்தேன். அவர்கள் இருவருக்குமான காமினேஷன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.