ஏமன், ஜன.5: ஏமன் நாட்டில் அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் அல் கொய்தாவின் முக்கிய தளபதியான படாவி பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகள் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக படாவி செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அல் கொய்தாவின் ஆதிக்கம் உள்ள அல் பய்டா பகுதியில் தனியாக வாகனம் ஒன்றில் படாவி பயணம் சென்று கொண்டு இருந்ததாகவும், அப்போது அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன என கூறப்படுகிறது. இதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யு.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் படாவி தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை பணியாட்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.