சிட்னி, ஜன.5:  இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் அபார சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 236-க்கு 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து ஆஸ்திரேலிய அணி திணறியது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்றைய ஆட்டம் நேர முடிவில், இந்தியா 386 ரன்கள் முன்னிலையில் உள்ளது.  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா, நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, 24 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரிஸ் 19 ரன்களிலும், கவாஜா 5 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலையில் இருந்து விரைவாக கவாஜாவும், ஹாரிஸும் ரன்களைச் சேர்த்தனர். இதனால், 30-வது ஓவரிலேயே 100 ரன்களை வேகமாக எட்டியது, ஆஸ்திரேலியா. இவ்வாறாக, உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஓரளவுக்கு நிலைத்து ஆடிய ஆஸ்திரேலியா, அதன்பின் 10 ஓவர்களில் கவாஜா, ஹாரிஸ், மார்ஷ் ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் இழந்து தடுமாறியது. பின்னர், மார்னஸ், ஹெட், கேப்டன் பெயின் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஹாண்ட்ஸ்கோம்ப், கம்மின்ஸ் ஜோடி நிலைத்து விளையாடினபோது, வானிலை ஒத்துவராத காரணத்தால், இன்றைய ஆட்டம் சற்று முன்கூட்டியே (83.3 ஓவர்களில்) முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. ஹாண்ட்ஸ்கோம்ப் (28), கம்மின்ஸ்(25) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தியாவின் குல்தீப் 3 விக்கெட்டுகள், ஜடேஜா 2 விக்கெட்டுகள், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், 386 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது.