சென்னை, ஜன.6:திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இன்று தனது முடிவை அறிவிக்கிறது.

இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அதிகாரம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
கருணாநிதி மரணத்தை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 28-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 3-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் வரும் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரில் தேர்தல் நடத்தினால் நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லிலியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை திருவாரூர் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் தனது அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்டார்.

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வி.சுந்தரமூர்த்தி, திமுக சார்பில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் அதிமுக, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் இப்போது தேர்தலை நடத்தினால் புயல் நிவாரணப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளை தொலைத்து விட்டனர். வாக்களிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லையென கருத்து தெரிவித்தனர்.

இப்போதைய தேவை நிவாரணப் பணியே தவிர தேர்தல் அல்ல என்றும் உறுதியாக கூறினர்.இந்த கருத்துக்களை பதிவு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி நிர்மல் ராஜ் நேற்று மாலையே தனது அறிக்கையை மாநில முதன்மை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பி வைத்தார்.

இதனடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று இரவோடு இரவாக அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இதனை பரிசீலித்த தலைமை தேர்தல் ஆணையம் நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை தேர்தல் அதிகாரிக்கு வழங்கியது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை காலை தேர்தலை தள்ளி வைப்பதா அல்லது நடத்துவதா என்பதை பற்றிய அறிவிப்பை தமிழக தேர்தல் அதிகாரி அறிவிக்கிறார்.இதனிடையே, திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்சநீதிமன்றத் தில் டி.ராஜா தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.