தேனி, ஜன.6:திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக துணைமுதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணனைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியாகவுள்ள நிலையில், வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என ஓபிஎஸ்., இபிஎஸ் கூட்டாக நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேனியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நிருபர்களுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக தலைமை கழகம் அறிவிக்கும், தேர்தல் கண்டு எப்போதும் அதிமுக அஞ்சியது இல்லையென்றும், திருவாரூர் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளராக மலர்விழி, பன்னீர்செல்வம், மனோகரன், கலியபெருமாள் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.