தஞ்சாவூர், ஜன.6: கும்பகோணம் அருகே காதல் போட்டியில் நண்பரை கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே பெண்ணை நால்வர் விரும்பியதால் நடந்த கொடூரத்தால் ஒருவர் பலியாகி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

முன்தசீர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திருமங்கலக்குடியில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற முன்தசீர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இரவு 1 மணியளவில் மும்தாஜ் பேகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர், உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ 5 லட்சம் கொடுத்தால் விடுவோம். என்று செல்போனில் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் மும்தாஜ் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று காலை திருபுவனம் வீரசோழ ஆற்றங்கரையோரம் முன்தசீர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசேதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அவரது செல் போன் அழைப்புகளஐ வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் முன்தசீர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக .முன்தசீரின் நண்பர்களான நியாஸ் அகமது, முகம்மது ஜலீல், சலீம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், அவர்கள் மூன்று பேரும் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் ஆனால் அந்தப் பெண் முன்தசீரை காதலித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மூவரும் திட்டமிட்டு அவரை வர வழைத்து கழுத்தறுத்ததாகவும், அதில் அவர் இறந்ததால் அவரது சடலத்தை ஆற்றங்கரையில் வீசியதாகவும் பின்னர், அவரது தாய்க்கு போன் செய்து 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.