சபரிமலை:கேரளாவிடம் மத்திய அரசு விளக்கம் கேட்கிறது

இந்தியா

புதுடெல்லி, ஜன.6:சபரிமலை விவகாரத்தில் கேரளா முழுவதும் வன்முறை ஏற்பட்டு வருவ தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கேரள அரசிடம் மத்திய அரசு விளக்க அறிக்கை கேட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கடந்த புதன்கிழமை 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் சென்று தரிசனம் செய்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கண்ணனூர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி தலைவர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.வன்முறை தொடர்பாக மாநிலம் முழுவதும் 3200 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 1886 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. கண்ணனூரில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.மாநில நிலவரம் குறித்து கவர்னர் பி.சதாசிவம் மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கினார்.

இது குறித்து முதலமைச்சர் பினராய் விஜயனின் அரசியல் செயலாளர் எம்.பி. ஜெயராஜன் கூறுகையில், உள்துறை அமைச்சரை கவர்னர் தொடர்புகொண்டு பேசுவது இது வழக்கமான ஒன்றுதான். இதற்கும் சபரிமலை விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

ஆனால் பிஜேபி தலைவர்கள் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், மாநிலத்தில் 4 நாட்களாக வன்முறை நீடித்து வருவதால் சட்டம் ஒழுங்கு கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரள நிலவரம் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்புமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.கண்ணனூரில் நேற்று முழு அடைப்புக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன. அங்கு இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்ட் விக்ரம் கூறுகையில், இந்த மாவட்டத்துக்கு கூடுதலான போலீஸ் படை வரவழைக்கப்பட்டுள்ளது என்றார்.தலச்சேரியில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.