திரையுலக முன்னோடிகள்: ஏழிசை வேந்தர் தியாகராஜ பாகவதர்

சினிமா

இந்தியாவில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற சொல் அமிதாப்பச்சனுக்குப் பின்பே பாபுலர் ஆனது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி காந்துக்குப் பிறகுதான் இந்த சொல் பிரபலமானது.

அதற்கு முன் சூப்பர் ஸ்டார் என்று எந்த நடிகரும் அழைக்கப் படவில்லை என்ற போதிலும், உண்மையில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் தான்.

1934 முதல் பத்து ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக பாகவதர் திகழ்ந்தார். அப்போது பல தமிழ்த் தயாரிப்பாளர்களின் கஜானாக்கள் இவரால் நிரம்பி வழிந்தன.
பாகவதரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார். அவருடைய பூர்வீகம் மாயவரம் என்ற போதிலும், அவர் திருச்சியில் வசித்து வந்தார். அவருடைய மனைவி மாணிக்கத்தம்மாள். 1-3-1910 அன்று தியாகராஜன் பிறந்தார்.

திருச்சி பரிவக்கரையில் ஜபமாலை மாதாகோயில் அருகேயுள்ள பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்த தியாகராஜனுக்கு, படிப்பில் நாட்டமில்லை. உய்யக்கொண்டான் ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து நீந்தும் தியாகராஜன், கழுத்தளவு நீரில் நின்றபடி பாடி சாதகம் செய்வார்.

படிப்பு வராததால், நகைகளுக்கு மெருகேற்றும் தந்தையின் தொழிலைச் சிறிது காலம் பாகவதர் கவனித்து வந்தார். மவுன படங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், பாகவதர் தனது தம்பிகள், தங்கையைக் கூட்டிக்கொண்டு சினிமாப் பார்க்க போய்விடுவாராம். அது மட்டுமின்றி எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகம் திருச்சியில் எங்கு நடந்தாலும் முதல் ஆளாக ஆஜராகிவிடுவாராம்.

ஒரு நாள் தந்தை கிருஷ்ணமூர்த்தி வெளியே ஏதோ வேலையாகச் சென்று விட்டு கடைக்குத் திரும்பினார். கடையில் பெரும் கூட்டம். வியாபாரம் பிரமாதம் போலிருக்கிறதே என்று வந்து பார்த்தால், சிறுவன் பாகவதர் ஒரு பாடலை கண்களை மூடிக்கொண்டு, அதில் லயித்து பாடிக்கொண்டிருக்க, கூடிய கூட்டம் மெய்மறந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.
தன் மகன் நகை செய்யப் பிறந்தவன் அல்லன் என்பதைப் புரிந்து கொண்ட தந்தை, முறையாக சங்கீதப் பயிற்சிக்காக மகனை திருவையாறு ராமசாமி பத்தர் என்பவரிடம் சேர்த்தார்.
ஓரளவு சங்கீதப் பயிற்சி பெற்ற பின்னர், அக்காலத்தில் பெரிய ரயில்வே அதிகாரியாக இருந்த எப்.ஜி.நடேச அய்யர் என்ற பிரபல அமெச்சூர் நாடக நடிகரிடம் கிருஷ்ணமூர்த்தி மகனைச் சேர்த்துவிட்டார். அவர் தியாகராஜனின் பாட்டைக் கேட்டு அசந்து, அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடம் அளித்தார். (இந்த நடேச அய்யர் தான் பிற்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சேவாசதனம்’ படத்தில் அவரது வயோதிக கணவராக நடித்தவர்.)
ஒருபக்கம் நாடகங்களில் நடித்துக் கொண்டே மறுபக்கம் முறையான இசைப் பயிற்சியையும் மேற்கொண்ட பாகவதர் ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.
பாகவதரும், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எஸ்.டி.சுப்புலட்சுமியும் ஜோடியாக நடித்த நாடகங்கள் தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்டன. இதனால் இந்த ஜோடியின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் பரவியது. இலங்கைக்கும் சென்று நாடகத்தில் நடித்தது இந்த ஜோடி. அப்போது பாகவதரின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் அங்கே சென்றிருந்தார்.

சென்ற இடத்தில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைந்தார்நாடகங்களில் புகழ்க்கொடி நாட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த தந்தையின் மரணத்தால் பாகவதர் பெரும் சோகத்துக்கு உள்ளானார்.

நாடக காண்ட்ராக்டரின் முயற்சியாலும், ‘இலங்கை குயில்’ என்று போற்றப்பட்ட நடிகை தவமணி தேவியின் தந்தை கதிரேசனின் உதவியாலும் பாகவதரின் தந்தை உடல்
திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டது.

தந்தையின் மறைவு சோகத்தில் ஆழ்த்தினாலும், ஒருவாறாக தேறி நாடகங்களில் நடித்துவந்த பாகவதரை சினிமா, பணத்துடன் பெரும் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மூலம் ‘பவளக்கொடி’ திரைப்படத்தில் அறிமுகமானார் பாகவதர். படம் பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவதாக சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் ‘நவீன சாரங்கதாரா’ படத்திலும் நடித்தார் பாகவதர். இந்தப் படத்திலும் எஸ்.டி.சுப்புலட்சுமி தான் ஜோடி.

சுப்பிரமணியம் ‘சாரங்கதாரா’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அதே கதையை பம்பாயைச் சேர்ந்த லோட்டஸ் பிக்சர்ஸ் என்ற கம்பெனியும் தயாரித்தது. (அக்காலத்தில் ஒரே கதையை பல கம்பெனிகள் ஒரே சமயத்தில் தயாரிப்பது வழக்கம்.) இதனால் சிறிது காலம் தனது தயாரிப்பை நிறுத்திவைத்தார்.

இதற்கிடையே பம்பாய் கம்பெனியின் படம் வெளியாகி படுதோல்வியடைந்தது. இதைப் பார்த்த சுப்பிரமணியம், கதையைச் சற்று மாற்றி, சுபமாக முடித்து ‘நவீன சாரங்கதாரா’ என்று வெளியிட்டார். சுப்பிரமணியம்-பாகவதர்- எஸ்.டி.சுப்புலட்சுமி கூட்டணியில் படம் அமோக வெற்றிபெற்றது. (பின்னாளில் 1958-ல் சிவாஜி கணேசன் நடித்து
‘சாரங்கதாரா’ வெளிவந்தது. சிவாஜியின் 50-வது படமாக வெளியாகியும், அப்படம் வெற்றி பெறவில்லை).

இவ்வாறு புகழேணியில் ஏறத் துவங்கிய பாகவதர் அதன் உச்சிக்கே சென்றார். சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் என தொடர்ச்சியாக ஒன்பது வெற்றிப் படங்களைக் கொடுத்து, திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்.

ஒவ்வொரு படமும் மற்ற படத்தை மிஞ்சும் வகையில் சூப்பர் ஹிட், மெகா ஹிட்டாக அமைந்தன. அதில் சிகரம் வைத்தது போல ‘ஹரிதாஸ்’ சென்னை பிராட்வே டாக்கீஸில் 110 வாரங்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது.

பணம், புகழ், செல்வாக்கு என சிகரம் தொட்ட பாகவதர் மீது யார் கண் பட்டதோ, லட்சுமிகாந் தன் என்னும் மஞ்சள் பத்திரிகை ஆசிரியர் வடிவில் வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது.(அடுத்த வாரம் பார்க்கலாம்)