சென்னை, ஜன.6: ராயப்பேட்டையில் இருந்து தி.நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பெண்ணிடம் இருந்து செல்போனுடன் கைப்பை பறிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராயப்பேட்டையை சேர்ந்த ஆகாஷ் வத்லே என்பவர் மனைவியுடன் தி.நகருக்கு மாநகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த சமயத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் ஆகாஷ் வத்லே மனைவியின் கையில் இருந்த பையை பறித்துக் கொண்டு திடீரென பேருந்திலிருந்து குதித்து ஓடத் தொடங்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.

பொதுமக்களும் பயணிகளும் அந்த ஆசாமியை ஓட ஓட விரட்டி பிடித்தனர்.

இதனை தொடர்ந்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார் .விசாரணையில் அவரது பெயர் சுமன் (வயது 20) என தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.