சென்னை, ஜன.6: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வரும் 9-ந் தேதி அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் தி.மு.க. வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார்.

இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.