சென்னை, ஜன.6:முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள 1000 ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளதால் அட்டைதாரர்கள் ரேசன் கடை முன்பு குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர் களுக்கும், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் குடும்பத் தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த பரிசுத் தொகுப்புடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக 1000 ரூபாய் பொங்கல் பரிசு அளிக்கப்படும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.

இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில்  அடையாளமாக 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளதையொட்டி பொது மக்கள் காலை 7 மணி முதல் ரேஷன் கடைகள் முன்பு குவிந்தனர்.

மேலும் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது.