சிட்னி, ஜன.6: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 4-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

மழை காரணமாக நேற்று 16 ஓவர்கள் வீச முடியாமல் ஆட்டம் தடைபட்டது. நேற்று காலையில் மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக துவங்கியது.

இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் டுகளை வீழ்த்தினார்.

அந்நிய மண்ணில் 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 322 ரன்கள் பின்தங்கி இருந்ததால் ஆஸ்திரேலியா மீது இந்தியா பாலோ-ஆனை திணித்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலிய வீரர்கள் தொடங்கினர். 4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி ஆட்டம் நிறுத்தப்பட்டது.இன்றைய ஆட்டத்தில் 31 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் என நினைத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் 5-ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுதான் முதல் தடவையாகும். 1947–ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி அங்கு தனது கனவை 12–வது முயற்சியில், அதாவது 71 ஆண்டுகளுக்கு பிறகு நனவாக்கியுள்ளது.புஜாராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.