சிட்னி, ஜன.7:  டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அந்நாட்டு மண்ணில் முதன் முதலாக வென்று, சரித்திர சாதனை படைத்துள்ளது.

இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் கூறியிருப்பதாவது: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான பங்களிப்பை கண்டு பெருமை கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். கடினமான போராட்டத்திற்கு கிடைத்த தகுதியான வெற்றி இது. திடமான அணியின் மூலம் நினைவில் நிற்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.