அமெரிக்காவில் இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் அரசுத்துறைகள் முடக்கம் மேலும் நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் பிடிவாதமே காரணம் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் எல்லை நெடுகிலும் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அந்த சுவரை எழுப்புவதற்கான நிதி ஒதுக்குவதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்புச்சுவர் மிகவும் அவசியம் என்பது டிரம்பின் நிலைப்பாடாகும். ஆனால், இது ஒரு தேவையில்லாத செலவு என ஜனநாயகக் கட்சி கூறுகிறது.

அண்மையில் நடந்த அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் மக்கள் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கக்கூடிய கீழவையில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அந்த அவையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஜனநாயக கட்சி. இதனால், டிரம்பின் மெக்சிகோ சுவருக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சி மறுத்து வருகிறது.

ஆனால், மெக்சிகோ சுவருக்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டில் கையெழுத்திட அதிபர் டிரம்ப் பிடிவாதமாக மறுத்து வருகிறார். இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர மறுப்பதால், அரசியல் பல்வேறு துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனலால் அரசின் முக்கிய துறைகள் கடந்த இரண்டு வாரங்களாக முடக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்றவோ அல்லது கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மெக்சிகோ சுவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். எல்லைச் சுவருக்கு முட்டுக்கட்டை போட்டால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்றும், ஆண்டுக்கணக்கில் அரசுத்துறைகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வி அடைந்திருப்பதால் அங்கு ஒரு விதமான நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.