இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

Uncategorized

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஆயுஷ்மான் பாரத் எனும் தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஆரம்பித்த நூறு நாட்களில் 6 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு பலன் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அளிக்கும் உலகின் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுகிறது.

‘மோடி கேர்’ என வழங்கப்படும் இந்த திட்டம் மிகப்பெரிய இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும். இதுபற்றி முகநூலில் பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சராசரியாக நாள்தோறும் 5000 பேர் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் வெகு வேகமாக இதில் சேருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து மொத்தம் 16,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் வெற்றியை கண்ட பல மருத்துவமனைகள் தாமாகவே முன்வந்து இதில் இணைந்து கொண்டிருக்கின்றன. இந்திய மருத்துவ சேவை துறையில் மிகப்பெரிய புரட்சியையும் மாற்றத்தையும் இத்திட்டம் ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ சிகிச்சைக்கான செலவை எண்ணி மலைத்த சாதாரண மக்கள் மருத்துவமனைகளை நாடாமல் இருந்த அவல நிலை மாறி தற்போது இந்த திட்டத்தின் மூலம் பெரும் பயன் பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்ந்தால் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே செலவிடும் நிலையில் இருந்த ஏராளமானோர், மருத்துவ சிகிச்சைக்கான தொகையை அரசே ஏற்றுக்கொண்டதால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதே சமயம் இந்த திட்டத்திற்கான நிபந்தனைகள் ஏழை எளிய மக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். அந்த இடையூறுகளை களைந்து திட்டத்தின் உன்னத நோக்கத்தை நிறைவேற்ற உரிய வகையில் அதை செயல்படுத்த வேண்டும்.