புதுடெல்லி, ஜன.7:தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் போல் வேடமிட்டு நாடாளுமன்றத்துக்கு எம்.பி. ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் நரமல்லி சிவபிரசாத். மக்களவை எம்.பி.யான இவர், நாடாளுமன்றத்துக்கு விதவிதமான வேடங்களை அணிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், இன்று தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு வந்த நரமல்லி சிவபிரசாத், ’நான் ஆணையிட்டால் என்ற தமிழ் பாடலை ஒலிக்க விட்டு அதற்கேற்ப சைகைகள் செய்தார். கையில் சாட்டை ஒன்றையும் வைத்திருந்தார்.

மக்களவையில் கேள்வி நேரம் துவங்கியதும், அவையின் மையப்பகுதிக்கு வந்த நரமல்லி சிவபிரசாத், கையில் இருந்த சாட்டையால் தன்னை தாக்குவது போல பாவனை செய்தார். பிற கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நண்பகல் வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார். அவை ஒத்திவைக்கும் நடைமுறைகள் நடந்து கொண்டிருந்த போது, நரமல்லி சிவபிரசாத், ஒலிநாடா கருவியில் எம்ஜிஆர் பாடல் ஒன்றையும் ஒலிக்க விட்டார்.