சென்னை, ஜன.8: 1998-ல் நடந்த போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதவி விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அந்த இலாகா கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஓசூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு பிஜேபி கட்சியில் இருந்தார். அப்போது ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி போராட்டம் நடந்தது. இதில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்ட 108 பேரில் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அவருக்கு 3 வருட சிறைத் தண்டனையும் ரூ.10,500 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. பாலகிருஷ்ணா ரெட்டியின் முறையீடு ஏற்கப்பட்டு, மேல்முறையீடு செய்யும் வகையில் சிறைத்தண்டனையை மட்டும் கோர்ட் நிறுத்திவைத்துள்ளது. எனினும் அமைச்சர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தமது பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அளித்த ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இலாகா கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.