சிட்னி, ஜன.8: ஆஸ்திரேலியாவின் நெ.1 வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கிற்கு இந்திய கேப்டன் பரிந்து பேசியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இத்தொடரில் மிட்செல் ஸ்டார்க் 7 இன்னிங்சில் 13 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் மீது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டார்க் மீதான விமர்சனம் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘ஸ்டார்க் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் சரியான மனநிலையில் உள்ளார். தற்போது வரை அவர் ஆஸ்திரேலியாவின் நெ. ஒன் பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் அவரை நோக்கி விமர்சனம் வைக்கப்படுவது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். ஸ்டார்க் மீது நெருக்கடியை திணிக்கக்கூடாது. ஏனெனில், திறமையான மற்றும் வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய இதுபோன்ற பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய அணி இழக்க விரும்பமாட்டார்கள்’ என்றார்.