நடுங்கும் குளிருக்கு காரணம் என்ன? வானிலை நிபுணர்கள் பதில்

தமிழ்நாடு

சென்னை, ஜன. 8: சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் புத்தாண்டு முதல் வழக்கத்திற்கு மாறாக குளிர் ஏற்பட்டு இருப்பதற்கு உலக அளவில் கிழக்கு நோக்கி குளிர் அலை வீசுவதும், துருவ சுழற்சி பலவீனம் அடைந்து இருப்பதுமே காரணம் என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்த பிறகு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பிற நகரங்களிலும், கேரளாவிலும் வழக்கத்திற்கு மாறாக குளிர் ஏற்பட்டுள்ளது.

இது மிகக் கடும்குளிர் அல்ல என்றபோதிலும் இதுபோன்ற குளிர் கடந்த காலத்தில் ஏற்பட்டது இல்லை என்றும் கூறப்படுகிறது. மலை பிரதேசங்களான ஊட்டி மற்றும் மூணாறில் வெப்பநிலை பூஜ்யம் மற்றும் மைனஸ் அளவுக்கு போய்விட்டது. உலக அளவில் மலேசியாவில் அதிகாலையில் சற்று நடுங்க வைக்கும் குளிர் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வழிமண்டல ஆய்வுத் துறையின் துணை பேராசிரியர் டாக்டர் அகிலேஷ் கூறுகையில், இந்த குளிருக்கு துருவ சுழற்சி பலவீனம் அடைந்திருப்பதும் ஒருகாரணம். இது தவிர வடமேற்கில் இருந்து கிழக்கில் இந்தியாவை நோக்கி குளிர் அலை வீசுகிறது. இதன் காரணமாகவும் வழக்கத்துக்கு மாறாக குளிர் ஏற்பட்டுள்ளது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியா வில் வடபகுதிகளில் இதுபோன்ற குளிர் வழக்கமானது தான். ஆனால் தென் மாநிலங்களில் இது புதிதாக இருக்கிறது. ஏனெனில் ஈரப்பதம் மற்றும் மேகங்கள் குறைந்து இருப்பதால் இரவு மற்றும் மாலை நேரங்களில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

வெதர்மேன் ஜான் பிரதீப் கூறுகையில், உலக பருவநிலை மாற்றத்திற்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை. தமிழகத்தின் உள்பகுதியில் அடுத்த சில நாட்களுக்கு இந்த குளிர் நீடிக்கும். பெங்களூரு மற்றும் மைசூரில் குளிர் அதிகமாக இருக்கும் என்றார்.