லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு: சிவகார்த்திகேயன்

சினிமா

தமிழ் திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறி தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு கேடயம் வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் எடிட்டர் ரூபன், கலை இயக்குனர் இளையராஜா,ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்,நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜுக்கு ஸ்பெஷல் தேங்ஸ். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை உதவி செய்ய இருக்கிறோம் என்றார்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.