சென்னை, ஜன.8: ரஜினி, அஜித் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் வெளியாக உள்ளது. அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள விஸ்வாசம் படமும் நாளை மறுநாள் வெளியாகிறது.

இந்த 2 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு இருப்பதால் தமிழகம் முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படங்களின் சிறப்பு காட்சியை போட்டு கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறு திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை நிர்வாகம் அரசிடம் முன் வைத்தது. அதை பரிசீலித்த அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களை தினம் 5 காட்சிகள் வீதம் சிறப்பு காட்சிகளாக திரையிட்டு கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நாளை மறுநாள் அதிகாலை 4.00 மணி காட்சிக்காக பல்வேறு தியேட்டர்களில் முன்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

ரூ.500 முதல், ரூ.1500 வரை விற்கப்பட்டுள்ள இந்த டிக்கெட்களை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் வாங்கி உள்ளனர். தற்போது அரசு 8 மணி காட்சிக்கு மட்டும் (ஒரு காட்சி) அனுமதி அளித்துள்ளதால் காலை 4.00 மணி காட்சி திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு ரோகினி திரையரங்கம், ஈக்காட்டு தாங்கல் காசி திரையரங்கம், போரூர் ஜி.கே.சினிமாஸ், குரோம்பேட்டை வெற்றி ஆகிய தியேட்டர்களில் அதிகாலை 4.00 மணி காட்சி நிச்சயம் திரையிடப்படும் என ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.