இந்தியாவின் பேட்டிங் தான் வெற்றிக்கு காரணம்: கங்குலி புகழாரம்

விளையாட்டு

ஈடன் கார்டன், ஜன.8:  ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்ததற்கு, இந்திய அணியின் பேட்டிங்தான் காரணம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.  ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பாக, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் செய்தியாளரிடம் கூறுகையில், இது ஒரு மகத்தான வெற்றி. இந்திய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். முக்கியமாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினர். 400-600 ரன்களை எடுத்ததுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், என்றார்.

2004-ன் இந்திய அணி சிறந்ததா? அல்லது கோலி தலைமையிலான தற்போதைய அணி சிறந்ததா? என்ற கேள்விக்கு, நான் எப்போதுமே இரண்டு அணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதனால் இதற்குஎன்னால் பதில் சொல்ல முடியாது என்று கங்குலி பதிலளித்தார். இதற்கு முன்னதாக, 2004-ல் ஆஸ்திரேலியாவில் கங்குலி தலைமையிலான இந்திய அணி 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்ததுதான் இந்தியாவின் சிறந்த பெர்ஃபார்மன்ஸாக இருந்தது, நினைவுக்கூறத்தக்கது.