நெல்சன், ஜன.8:  இலங்கைக்கு எதிராக இன்று நடந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன்மூலம், 3-0 என்ற கணக்கில் இலங்கையை வொயிட்வாஷ் செய்துள்ளது.  இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் தொடர் நெல்சன் நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு(இந்திய நேரப்படி) தொடங்கியது.

ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட நியூசிலாந்து அணிக்கு இது சம்பிரதாய போட்டியாகவே கருதப்பட்டாலும் இலங்கையை வொயிட் வாஷ் செய்யும் நோக்கில் அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் குப்திலும் முன்றோவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் கனே வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் கடந்த வில்லியம்சன் (55) சண்டகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லருடன் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். ராஸ் டெய்லர், அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது அவரது 20-வது சதம். பின்னர், 137 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோல்ஸூடன் நீஷம் இணைந்தார். இருவரும் அடித்து விளாசினர். நிக்கோல்ஸ் 80 பந்துகளில் 124 ரன்னும், நீஷம் 6 பந்துகளில் 12 ரன்னும் விளாச, 50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்தது. பின்னர், களமிறங்கிய இலங்கை வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சில் சிக்கி தவிக்க,மளமளவென விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி, இலங்கை அணி, 41.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 249 ரன்களிலேயே சுருண்டது.

அதிகபட்சமாக, அந்த அணியின் திசாரா பேராரா 80 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்தது.