காஞ்சிபுரம், ஜன.8:  கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை, திருப்போரூரில் இன்று அதிகாலை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி சென்ற நபரை கைது செய்து போலீசார் தீவிர  விசாரணை நடத்திவருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தை சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன்-காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்கப் போன அவர்கள், அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியுள்ளனர். திடீரென விழித்து பார்க்கும்போது, குழந்தை ஹரிணி காணாமல் போயிருப்பதை கண்டு, பதறிப்போயுள்ளனர்.

இது குறித்து, அந்த தம்பதி அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் போலீசார் தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடிவந்தனர். இதனிடையே, கொல்கத்தாவில் ஹரிணி போல ஒரு குழந்தை உள்ளதாக வந்த தகவலின்பேரில், அங்கு சென்று பார்த்தபோது ஹரிணி அங்கு இல்லாததால், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.  இந்த நிலையில், இன்று அதிகாலை திருப்போரூர் பகுதியில் குழந்தை இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குழந்தையின் பெற்றோரை, தனிப்படை போலீசார் உடன் அழைத்து சென்று சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் குழந்தை ஹரிணி இருந்துள்ளாள்.

\உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த போலீசார், குழந்தையுடன் அந்த வீட்டில் இருந்த நபரை கைது செய்து விசாரித்ததில், திருப்போரூரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. தனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதததால், மிகுந்த மன வேதனையில் இருந்த அவர்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த குழந்தையை கடத்தியதாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்குமுன் காணாமல் போன குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை காஞ்சிபும் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அதிமாணி பாராட்டினார்.