சென்னை, ஜன.8:  போலீஸ் போல் நடித்து சென்னை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  சென்னை, சூளையை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 25). இவர் பெரியமேட்டில் உள்ள தோல் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருகிறார். இவரை, கடந்த சில நாட்களுக்குமுன் சந்தித்த சிலர், தங்களை இடைத்தரகர்கள் என்று கூறி அறிமுகமாகியுள்ளனர்.

ரூ.50 லட்சத்திற்கு 2,000 நோட்டுகளாக தங்களிடம் தந்தால், தங்களுக்கு தெரிந்த தொழிலதிபரிடம் அதை கொடுத்து 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி, ஒரு கோடி ரூபாய்யாக திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி முகமது இப்ராகிமும், பணத்தை எடுத்துக்கொண்டு சகோதரர் முகமது இமாம் மற்றும் ஆடிட்டர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார்.

இடைத்தரகர்கள் கேட்டுகொண்டதன் பேரில், ஐயப்பன் தாங்கலுக்கு சென்ற இவர்கள், பணத்துடன் சிறிதுநேரம் காரிலேயே காத்திருந்துள்ளனர். அப்போது, எதிரே மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் என்று தெரிவித்துக்கொண்டு, கடத்தல் புகார் ஒன்றின்பேரில் உங்களின் காரை சோதனையிட உள்ளோம் என்றுகூறிவிட்டு, காரில் வைத்திருந்த ரூ.50 லட்சம் அடங்கிய பணப்பையை எடுத்துக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளனர். தவறு நடந்துவிட்டதாக சுதாரித்துகொண்ட முகமது இப்ராகிம் உடனடியாக தனது காரில் ஏறி, அந்த காரை விரட்டிச்சென்றுள்ளனர். சிறிது தூரத்தில், அந்த காரை வழிமறித்து அதில் இருந்த ஒருவரை பிடித்து விசாரிக்கும்போது, மற்ற மூவரும் கார் மூலம் கண்மறைவில் இருந்து தப்பியுள்ளனர்.

பிடிப்பட்ட அந்த நபரை போரூர் போலீசில் ஒப்படைத்துள்ளார், முகமது இப்ராகிம். அந்த நபரை கைது செய்து போலீசார் நடத்தி விசாரணையில், சதிஷ்குமார் என்பது தெரியவந்தது. சதிஷ்குமார் அளித்த தகவலின்பேரில், மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய மேலும் 2 பேரை போரூர் போலீசார் தேடிவருகின்றனர். ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற புரளியையடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றமுயன்று தற்போது பணத்தை இழந்து நிற்பதாக தொழிலதிபர் போலீசில் வருத்தம் தெரிவித்துள்ளார்.